Tuesday, December 4, 2007

வாழ்க்கை சக்கரம்


"ஐய்யோ! என்னங்க, குழந்தைக்கு ஜுரம் ஜாஸ்தியாகிட்டே போகுது. சீக்கிரம் போய் டாக்டர் குடுத்த மருந்த வாங்கிட்டு வாங்க போங்க", என்று அழுது கொண்டே ரவியை விரட்டினாள் அவன் மனைவி. மூன்று நாட்கள் ஆகிவிட்டது வேலைக்கு போய். குழந்தையை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு அலைந்ததால் 3 நாளாக வேலைக்கு செல்ல முடியவில்லை. தினக் கூலி கொண்டு வந்தால் தான் அவன் வீட்டில் அடுத்த நாள் அடுப்பெரியும். இதில் மருந்து வாங்க காசு ஏது? இருந்த காசை எல்லாம் குடுத்து டாக்டரை கூட்டி வந்து பார்த்தாயிற்று, இனி மருந்துக்கு எங்கே போவது? யோசித்துக் கொண்டே ரவி குடிசையை விட்டு வெளியே வந்தான். சட்டைப்பையில் இரண்டு ரூபாய் சில்லறை மட்டும்தான் இருந்தது. இதைத்தான் "மருந்துக்குக் கூட காசு இல்லை" என்று சொல்வார்களோ!


சட்டென்று அவனுக்கு தன்னுடன் வேலை செய்யும் நண்பன் மாரியின் நியாபகம் வந்தது. அவன் இந்நேரம் மில்லில் வேலை செய்து கொண்டிருப்பான். போய் கேட்டால் ஏதாவது உதவி செய்வான். நம்பிக்கையோடு நடந்து போய் ஒரு பஸ்சில் ஏறினான். மாலை நேரம் என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. கையில் இருந்த இரண்டு ரூபாயில் "ஒரு பிருந்தாவன் மில்" என்று கேட்டு டிக்கெட் வாங்கிக்கொண்டான். கூட்ட நெரிசலில் ரவி பஸ்சின் உள்ளே தள்ளப்பட்டான். "ச்சே! என்ன கூட்டம்பா!" என்று முனுமுனுத்துக் கொண்டே ஒரு பெரியவர் ரவியின் முன் தள்ளிக் கொண்டு வந்தார். டிக்கெட் வாங்க தனது ஜிப்பாவின் வலது பாக்கெட்டில் கைவிட்டு சில்லறை எடுத்தார். எடுக்கும் பொழுது தவறி விழுந்த அவரது மணி பர்சை பாவம் அந்த பெரியவர் கவனிக்கத் தவறிவிட்டார். இதை கவனித்த ரவி குனிந்து அந்த பர்சைக் கையில் எடுத்தான். "பெரியவரே உங்க பர்ஸ்!" என்று சொல்ல எத்தனிபதற்குள் அவர் கூட்டத்தில் சிக்கி முன்னே சென்றுவிட்டார். ரவி அந்தப் பெரியவரைத் தேடினான். கிடைக்கவில்லை. "பிருந்தாவன் மில் எறங்கு" கண்டெக்டரின் சத்தம் ரவியை எட்டியது. ரவி பெரியவரை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான். "யோவ், இன்னும் என்னைய பண்ணிடிருக்க பஸ்குள்ள?" என்று கண்டெக்டர் திட்ட, வேறு வழியில்லாமல் ரவி கீழே இறங்கினான். முன் பக்கம் ஓடிச் சென்று பெரியவர் இருக்காரா என்று பார்த்தான். காணவில்லை. பஸ் வேகமாக புறப்பட்டு சென்றது.


கையில் பர்சுடன் மில் வாசலில் நின்றுகொண்டிருக்கிறான் ரவி. பர்ஸையும் பஸ்ஸையும் மாறி மாறிப் பார்த்தான். பஸ் கண்ணில் இருந்து மறைந்து விட்டது. கனமான அந்த பர்ஸை திறந்து பார்த்தான் ரவி. உள்ளே நிறைய சாமி படங்களுடன் மூன்று 100 ரூபாய் தாள்கள் இருந்தது. கையில் காலணா இல்லாத அந்த நேரத்தில், அந்த 100 ரூபாய்த் தாள்கள் அவனுக்குக் கடவுளைப் பார்த்தமாதிரி இருந்தது. அந்தப் பெரியவரைத் தேடிப்போய் பர்ஸை கொடுத்துவர அவனுக்கு நேரமும் இல்லை, மனமும் இல்லை. தேவைப் படும் நேரத்தில் ஆண்டவனாய்க் கொடுத்தது போல் இருந்தது அவனுக்கு. "நானாகத் திருடவில்லை, அதுவாகத்தான் கிடைத்தது" என்று கொஞ்ச நஞ்சமிருந்த குற்ற உணர்ச்சியைக் கொன்று போட்டான். திடீரென்று ஏதோ நினைத்தவன், அருகிலுருந்த மருந்துக் கடையை நோக்கி ஓடினான்.


அவனை இறக்கி விட்டு சென்ற அந்த பேருந்து வெகு தூரம் சென்ற பின் பாதி வழியில் நின்றது. உள்ளே ஒரு பெரியவர் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார். "ஐயோ! என் பர்ஸை காணலியே. எந்தப் படுபாவி எடுத்தானோ. என் மகளுக்கு ஒடம்பு சரியில்லைனு மருந்து வாங்கப் போய்ட்டிருக்கேன், இப்ப போய் இப்படி ஆயிடிச்சே நான் என பண்ணுவேன். என் மகள் ஆஸ்பத்திரியில படுத்து கிடக்கறா. இப்ப பணத்துக்கு நான் எங்க போவேன்".

1 comment:

Anonymous said...

super na..
idhu than ipa neraya perthoda nelama..
idhula andha paeriyavaru paavama ila
ravi senjadhu thapa na